அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பெருநாள் தொழுகை – சில தகவல்கள்


முஸ்லிம்களுக்கான இரு பண்டிகைகள்:

இன்று முஸ்லிம்களில் சிலர் மார்க்கம் என்ற பெயரில் பல பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இஸ்லாத்தில் உள்ளது இரண்டே இரண்டு பண்டிகைகள் தான். அவ்விரண்டும் அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்டவைகள்.
நபி (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து) மதீனாவிற்கு வந்த போது அம்மக்கள் வருடத்தில் இரு நாட்களை விளையாட்டு தினங்களாக்கி அறியாமைக் கால வழக்கப்படி அவைகளை பண்டிகைகளாக கொண்டாடி வந்தனர். இதனை செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விளையாட்டு தினங்களாக்கி (பண்டிகைகளாகக்) கொண்டாடும் இந்த இருநாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இரு நாட்களை (பண்டிகைகளாக) அல்லாஹ், முஸ்லிம்களாகிய உங்களுக்கு அருளியுள்ளான், (அவைகள்:) (நோன்புப் பெருநாளான) ஈதுல் பித்ர் மற்றும் (ஹஜ்ஜுப் பெருநாளான) ஈதுல் அள்ஹா” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: நஸாயீ 1544
அத்தகைய பெருநாட்களில் கடைப்பிடிக்க வேண்டியவைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

பெருநாள் தொழுகையில் கடைப்பிடிக்க வேண்டியவை:

பெருநாள் தினத்தில் சூரியன் உதயமாகி நன்கு பிரகாசமானவுடன் முதலில் செய்ய வேண்டியது பெருநாள் தொழுகை தொழுவதேயாகும், சில ஊர்களில் தொழுவதற்கு 9:30 மணியாக்கி விடுகிறார்கள், இது தவறானதாகும். மேலும் பெருநாள் தொழுகையானது பள்ளியில் தொழப்படுவதல்ல, திடலில் தான் தொழ வேண்டும், தொழுத பின்பே உரை நிகழ்த்தப்பட வேண்டும், ஜுமுஆ போல் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்துவதோ, மிம்பர் வைப்பதோ, இரு உரை நிகழ்த்துவதோ கூடாது, அவ்வாறு செய்வது நபிவழியல்ல என்பதை விளங்க வேண்டும். ஆனால் சில இடங்களில் நபிவழிக்கு மாற்றமான பள்ளியில் தொழுவது, தொழும் முன் ஒரு உரை, தொழுத பின் மிம்பரில் ஏறி உரை என்ற பெயரில் அரபியில் ஒன்றை வாசிப்பது போன்ற செயல்கள் அரங்கேறுகிறது, இது தவறானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏறமுயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன். அதற்கு மர்வான் ‘நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறி விட்டது’ என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும் என கூறினேன். அதற்கு மர்வான் ‘மக்கள் தொழுகைக்குப் பிறகு இருப்பதில்லை’ எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்’ என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி)
நூல்: புகாரி 956

பெருநாள் தொழுகையில் பெண்கள் & பெருநாளின் தக்பீர்:

பெருநாளில் தொழும் திடலுக்கு பெண்களும் கட்டாயம் செல்ல வேண்டும். மாதவிடாய் பெண்களும் செல்ல வேண்டும். மாதவிடாய் பெண்கள் தொழுகையைத் தவிர மற்றவைகளைச் செய்யலாம். அனைவரும் தக்பீர் அதிகமதிகம் சொல்ல வேண்டும், தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்பது மட்டும் தானே தவிர, அதனுடன் சேர்த்து இன்ன பிற நீள வசனங்களை சொல்வதல்ல. தக்பீர் சொல்லும் போது சப்தமிட்டு சொல்வதை மார்க்கம் தடை செய்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெருநாளில் தொழும் திடலுக்கு பெண்களாகிய நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் (போதும் மட்டும்) அவ்விடத்தைவிட்டு விலகியிருப்பார்கள். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 971, 974

நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு செல்லும் முன் சாப்பிடுதல்:

நோன்புப் பெருநாளில் தொழுகைக்கு செல்லும் முன் சாப்பிடாமல் செல்லக் கூடாது, நபி (ஸல்) அவர்கள் 1, 3, 5 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு விட்டுத் தான் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 953
மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பெருநாள் தொழுகைக்கு பாங்கு, இகாமத் இல்லை:

மற்ற தொழுகைகளுக்கு பாங்கு, இகாமத் சொல்வது போல் பெருநாள் தொழுகைக்கு சொல்லக்கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு பெருநாள் தொழுகையை உரை நிகழ்த்தும் முன் தொழ வைத்தார்கள், அத்தொழுகைக்காக பாங்கு, இகாமத் சொல்லவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸாயீ / அஸ்ஸுனன் அல் குப்ரா 1750

பெருநாள் தொழுகைக்கு முன், பின் சுன்னத் கிடையாது:

மற்ற கடமையான தொழுகைகளுக்கு சுன்னத் தொழுகை இருப்பது போல் பெருநாள் தொழுகைக்கு கிடையாது. அதன் முன்போ, பின்போ எதுவும் தொழக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் (பெரு நாள் தொழுகை) தொழுதார்கள். அதற்கு முன்பும் எதையும் தொழவில்லை; அதற்குப் பின்பும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 989

பாதைகளை மாற்றுதல்:

பெருநாள் தொழுகை தொழச் செல்லும் போது ஒரு பாதையிலும், தொழுது விட்டு திரும்பும்
போது வேறு பாதையிலும் வர வேண்டும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (ஒரு பாதையில் தொழும் திடலுக்குச் சென்றுவிட்டு) வேறு பாதையில் திரும்பி வருவார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 986

பெருநாள் தொழுகை முறை:

பெருநாள் தொழுகையானது இரு ரக்அத்களாகும். வழமையான இரு ரக்அத்கள் (எ.கா: பஜ்ர்) எப்படி தொழ வேண்டுமோ அதே போல் தான் பெருநாள் தொழுகையும் தொழ வேண்டும், ஒரு வித்தியாசம் என்னவென்றால் வழமையான தக்பீர்களுடன் கூடுதலாக (7+5) 12 தக்பீர்கள் சொல்ல வேண்டும். அதாவது தொழுகையின் துவக்க தக்பீருக்குப் பின் ஓத வேண்டிய இந்த துஆஅல்லது இந்த துஆவை ஓதி விட்டு அதற்குப் பின் 7 தக்பீர்கள் சொல்ல வேண்டும், தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் சொல்வது மட்டும் தானே தவிர, கைகளை அவிழ்த்து அவிழ்த்து கட்டுவதல்ல, தக்பீர்களுக்கிடையில் எதுவும் ஓத வேண்டியதில்லை. இந்த 7 தக்பீர்கள் சொன்ன பின் அல்ஹம்து சூராவும் துணை சூராவும் இமாமானவர் சப்தமாக ஓத வேண்டும். பின் வழமையான தொழுகை போல் முதல் ரக்அத்தை முடித்து இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்தவுடன் ஐந்து தக்பீர்கள் கூற வேண்டும், இதிலும் கைகளை அவிழ்த்து அவிழ்த்துக் கட்டக் கூடாது, இதிலும் தக்பீர்களுக்கிடையில் எதுவும் ஓத வேண்டியதில்லை. இந்த 5 தக்பீர்கள் சொன்ன பின் அல்ஹம்து சூராவும் துணை சூராவும் இமாமானவர் சப்தமாக ஓத வேண்டும். பின் வழமையான தொழுகை போல் ஸலாம் கொடுத்து தொழுகையை முடிக்க வேண்டும், (இதை விடுத்து மதஹபு படி 3+3 தக்பீர்கள் சொல்லி தொழுவது நபிவழிக்கு மாற்றமானது)
பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். அ(ந்தந்த ரக்அத்களில் அவ்வெண்ணிக்கையிலான தக்பீர்களைக் கூறிய)தற்கு பிறகு (தான் அந்தந்த ரக்அத்களுக்கான) கிராஅத் ஓத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1151

பெருநாள் தினத்தில் பிறருக்கு கூற வேண்டியது:

பெருநாள் தினத்தில் “தகப்பலல்லாஹு மின்னா வமின்க்க” என்ற வாசகம் கூறுவது பெரும்பாலும் காணப்படுகிறது. இது சம்பந்தமாக சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவையனைத்தும் பலவீனமானவைகளாக உள்ளன, மேலும் ஈத் முபாரக் என்று சொல்வதை மார்க்கம் போல் செயல்படுத்துவதும் காணப்படுகிறது, இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை, எப்போதும் போல் அடுத்தவரைக் கண்டால் ஸலாம் கூறுவதே சிறந்தது, மேலும் அவருக்காக மார்க்கம் காட்டிய வழியில் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். பெருநாளின் வணக்கங்களை மார்க்கம் காட்டிய வழியில் செய்யுங்கள்.
இவைகளையும் பாருங்கள்:
Blogger Widget