அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பலவீனமான செய்தி -4


நபித்தோழர்களை ஏசுவதும், அல்லாஹ்வின் சாபமும்:


மேற்கண்ட புகைப்படமானது முகநூலில் சிலரால் பதியப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது, இதில் கூறப்பட்டுள்ள செய்தி திர்மதீயில் இடம்பெற்றும் உள்ளது.
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ نَافِعٍ حَدَّثَنَا النَّضْرُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا سَيْفُ بْنُ عُمَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يَسُبُّونَ أَصْحَابِي فَقُولُوا لَعْنَةُ اللَّهِ عَلَى شَرِّكُمْ
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻯ 3830

என்னுடைய தோழர்களை ஏசுபவர்களை நீங்கள் கண்டால், “உங்களுடைய தீமைக்காக உங்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!” என்று கூறுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: திர்மிதீ 3830

ஆனால் இச்செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல, இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இது ஏற்கத்தக்க செய்தியல்ல என்று தெளிவுப்படுத்திய ஒன்றைத் தான் இவர்கள் பதிந்தும், பரப்பவும் செய்கிறார்கள், இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் ஸைஃப் பின் உமர் மற்றும் நள்ர் பின் ஹம்மாத் ஆகிய இருவருமே பலவீனமானவர்கள். எனவே இச்செய்தி ஏற்க இயலாததாகிறது. ஆதலால் இதை எவரும் பரப்ப வேண்டாம்.

மிஷ்காத் என்பது நேரடி ஹதீஸ் நூல் அல்ல. புகாரி, முஸ்லிம் திர்மிதீ, அபூதாவூத் போன்ற நேரடி ஹதீஸ் நூற்களிலிருந்து முழு அறிவிப்பாளர்கள் வரிசையை நீக்கி விட்டு, தலைப்பு வாரியாக ஹதீஸ்களைத் தொகுத்து எழுதப்பட்ட நூல் தான் மிஷ்காத். அறிவிப்பாளர் வரிசைத் தொடர் அறவே இருக்காத இந்நூலை ஏதோ நேரடி ஹதீஸ் நூல் போன்று ஆதாரம் காட்டியிருப்பது வியப்பிற்குரியதாக உள்ளது. நாம் ஹதீஸ்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பை பதியும் போது, (அறிவிப்பாளர் வரிசைத் தொடர் வரிசை இன்றி) செய்தி, அதை அறிவிக்கும் நபித்தோழரின் பெயர், அது இடம்பெறும் நூலின் பெயர் என்று பதிகிறோமே, அதே போல் நேரடி ஹதீஸ் நூலில் இடம்பெறும் ஹதீஸ்களை அரபியிலேயே எழுதி விட்டு அந்நூலின் பெயர் மேற்கோள் காட்டப்பட்டுள்ளவைகளாகத் தான் இந்நூல் இருக்கும். 

இவர்கள் பதிந்து பரப்பும் திர்மிதீயில் இடம்பெற்றிருக்கும் மேற்காணும் செய்தி பின்வருமாறு தான் மிஷ்காதில் இடம்பெற்றுள்ளது.

عن ابن عمر – رضي الله عنهما – قال : قال رسول الله – صلى الله عليه وسلم – :  إذا رأيتم الذي يسبون أصحابي فقولوا : لعنة الله على شركم . رواه الترمذي

திர்மிதீயில் இடம்பெறும் ஹதீஸ் என்று தான் மிஷ்காதிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, திர்மிதீயிலுள்ள அச்செய்தி பலவீனமானது என்பதை மேலே கண்டோம், எனவே இது போன்ற செய்திகளைப் பரப்ப வேண்டாம்.
பலவீனமான செய்திகள் தொடர்பான எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.

குறிப்பு:
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றக்கூடிய சமுதாயத்திலேயே சிறந்தவர்கள் நபித்தோழர்கள் தாம் என்பதற்கும் அவர்களை ஏசக் கூடாது என்பதற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உண்டு, அதை விட்டு விட்டு அவர்களின் சிறப்பைக் கூற மேற்காணும் நிராகரிக்கத்தக்க செய்தியைப் பதிந்து பரப்ப வேண்டாம் என்பது தான் நாம் சொல்வது.
Blogger Widget